தாய், தனக்குச் சோறு போடும் போது ரூபன் அவளது கரங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் அப்படித்தான் செய்வான். குஷ்டரோகம் போன்ற அவளது நெளிந்த விரல்களும், வெள்ளையும் கருப்புமான தழும்புகளும் அவனுக்கு அருவருப்பாக தெரிந்தது. கரண்டி இல்லாத போது, அவள் தன் கையினால் சாதத்தை எடுத்துப் போடும்போது அதைச் சாப்பிட முடியாமல் தவிப்பான். அவளது அரவணைப்பு இவனுக்கு கோபமூட்டியது. அவள் குளிப்பாட்டி விடுவதை வெறுத்தான். அவள் தன்னோடிருப்பதை தன் நண்பர்கள் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அவன் வளர வளர தாயை குறித்த அருவருப்பு எண்ணம் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்தது. ஆயினும் தன் உணர்வுகளைத் தன் தாயிடம் சொல்ல அவனுக்குத் தைரியமில்லை. ஒரு நாள் தாங்க முடியாமல் தன் தாயிடம் கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான். அவளைப் புண்படுத்தாமல் மென்மையாக, இனி தனக்கு அவள் கைகளால் சாதம் போடவேண்டாமென சொல்லத் திட்டமிட்டான். ரூபனுக்கு வயது ஆறு. யாரும் அவனுக்கு தாயின் கரங்களைக் குறித்துச் சொன்னதில்லை. இறுதியில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டுவிட்டான்.‘‘மம்மி, உங்கள் கைகளுக்கு என்ன ஆனது? ஏதாவது வியாதியா அல்லது என்ன?’’ அவனது தாய் புன்முறுவல் பூத்தார்கள்.
‘‘நான் உனக்குச் சாதம் போடும்போது நீ முகம் சுளிப்பதை நான் கவனித்த படியால் நானே ஒரு நாள் உன்னிடம் பேசவேண்டுமென்று இருந்தேன். கதையைக் கேள், இந்த வீட்டிற்கு வருமுன்பாக நாம் ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். நீ அப்போது ஆறு மாதக் குழந்தை. உன்னை பாயில் தூங்க வைத்துவிட்டு மாட்டைக் கவனிக்கச் சென்றேன். திடீரென்று கூக்குரல் கேட்டு ஓடி வந்தபோதுதான் நமது வீடு தீபற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். வீட்டைச் சுற்றி பலரும் நின்று நெருப்பை அணைப்பதற்காக தண்ணீரும் மணலும் வீசிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே பாய்ந்து சென்று உன்னை எடுத்து வர விரும்பினாலும், மக்கள் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், அவர்கள் பிடியிலிருந்து எப்படியோ என்னை விடுவித்துக் கொண்டு உள்ள பாய்ந்தேன். நீ படுத்திருந்த பாய் தீப்பற்றத் துவங்கியிருந்தது. உஷ்ணத்தினால் நீ கண்விழித்து அழுதுகொண்டிருந்தாய். உன்னை அணுகும் முன்பாக தீப்பிழம்புகளை அணைக்க வேண்டியிருந்தது. என் கைகளினால் தீயை அணைத்து உன்னைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தேன்.
வெளியே வந்த பிறகுதான் என் கைகள் வெந்துபோயிருந்ததைக் கண்டேன். ஆனால் நீ பிழைத்துக்கொண்டாய் என்ற நிம்மதி எனக்கு. என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையும் பெற்றேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், என் கைகள் ஆறினதால் அவற்றைப் பயனப்படுத்த முடிகிறது’’ என்றார்கள்.இதற்குள் ரூபனின் கண்களில் நீர் வழியத் துவங்கியிருந்தது. ஏங்கி ஏங்கி அழுதான். தாயின் கரங்களைத் தன் கைகளில் எடுத்து முத்தமிட்டான். ‘‘அம்மா, நான் பார்த்ததிலேயே மிகவும் அழகிய கரங்கள் இவைகள்தான்’’ என்று சொல்லி தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அவர்களுடைய கரங்களைத் தன் நண்பர்களுக்குக் காட்டித்தழும்புகளின் கதையை விவரித்துக் கூறினான். தாயின்மேல் அவன் கொண்டிருந்த அன்பு அணைகட்ட முடியாததானது. தாய் அவனது தலையைக் கோதினாள். அவளது மடி அவனுக்கு மோட்சமாக இருந்தது.
இறைமக்களே, இயேசுகிறிஸ்து நமக்கு செய்ததும் இதுவேதான். நம்மை நரக அக்னிக்குத் தப்புவிக்கும்படியாக அவர் தமது முகம், கைகள், கால்கள் மற்றும் முதுகைக் காயப்படவும் புண்ணாகவும் ஒப்புக்கொடுத்தார். நமது இதயப்பூர்வமான அன்புக்கு அவர் தகுதியானவர் அன்றோ? இச்சம்பவத்தை வாசித்த நீங்கள் நமக்காக பலியான இயேசுவின் அன்பை எண்ணி நன்றி கூறுவீர்களா? வாழ்நாள் முழுவதும் கல்வாரியின் அன்புக்கு கட்டுப்பட்டவர்களாக வாழ தேவன் நமக்கு கிருபையளிப்பாராக. தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)
– அருள்முனைவர்:
பெ.பெவிஸ்டன்.
The post காயப்பட்ட அழகான கரங்கள் appeared first on Dinakaran.