துபாய்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
ஆனால் அந்த இடத்தில் விராட் கோலிதான் வேண்டுமென்றே கான்ஸ்டாஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். அந்த தருணத்தை மீண்டும் பார்க்கும்போது விராட் கோலிதான் கான்ஸ்டாஸ் மீது மோதியது தெரிகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), விராட் கோலி மீது தவறு உள்ளதை கண்டறிந்துள்ளது.
இதனால் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், ஒரு கருப்பு புள்ளியும் (டிமெரிட் புள்ளி) வழங்கி ஐ.சி.சி. தண்டனை விதித்துள்ளது.