காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா 40 பயனாளிகளுக்கு ₹2.18 கோடி நலத்திட்ட உதவி

2 weeks ago 2

*120 போலீசாருக்கு பதக்கம் வழங்கி கவுரவிப்பு

சேலம் : சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி தேசிய கொடியேற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாடு முழுவதும் குடியரசு தினவிழா நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், திறந்த ஜீப்பில் சென்று, சேலம் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் ஜேஆர்சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில், சிறப்பாக பணியாற்றிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த 64 போலீசார் மற்றும் மாநகரை சேர்ந்த 56 போலீசார் என 120 பேருக்கு, முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை கலெக்டர் பிருந்தாதேவி வழங்கி கவுரவித்தார். பின்னர், வானில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.

தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள், எல்லைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி, கதர் ஆடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவர் துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 453 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினர்.

மேலும், சிறப்பாக செயல்பட்ட 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளியை சேர்ந்த 26 ஆசிரியர்கள், 6 மருத்துவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 26 பேருக்கு பாராட்டு சான்றிதழ், சிறப்பாக செயல்பட்ட 9 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 22 உறுப்பினர்களுக்கு சான்றிதழ் ஆகியவற்றை, கலெக்டர் பிருந்தாதேவி வழங்கி பாராட்டினார்.

விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மை துறை, மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 40 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசபக்தி, மனிதநேயம், நாட்டுப்புற நடனம், பரதம் மற்றும் கிராமிய நடனம், தமிழ்மொழியின் மேன்மை உள்ளிட்ட தலைப்புகளில் 1,250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி கவுதம் கோயல், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, டிஆர்ஓ ரவிக்குமார், மாநகர துணை கமிஷனர்கள் கீதா, வேல்முருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா 40 பயனாளிகளுக்கு ₹2.18 கோடி நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Read Entire Article