
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பால்புரா கிராமத்தை சேர்ந்தவர் வேணு. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று (30-ந் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் மணமகன் வேணு புன்னகையுடன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் மேடையில் அமர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுத்தனர். நள்ளிரவு வரவேற்பு முடிந்ததும் மணமகனும், மணமகளும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.
நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மண்டபத்தில் அனைவரும் குவிந்து இருந்தனர். இதையடுத்து முகூர்த்த நேரம் வந்ததும், மணமகள் கழுத்தில் தாலி கட்டும்படி புரோகிதர் மணமகனிடம் கூறினார். அப்போது திடீரென்று மணமேடையில் இருந்து எழுந்த மணமகன் வேணு, மணப்பெண் ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்துக்கு முன்பே இதை என்னிடம் கூறினார். வேறொருவரை காதலித்த பெண்ணை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?. இது வாழ்க்கைக்கு ஒத்து வராது. திருமணம் செய்து கொண்டாலும் மன நிம்மதியுடன் வாழ முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தினார்.
மேலும் அவர் மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மணமகனின் இந்த செயலால் மணப்பெண், அவரது குடும்பத்தினர், திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அதேநேரம் மணமகன் வேணு மீது குற்றம் சாட்டிய பெண் வீட்டார் உடனே போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மணமகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.