திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மனைவி ஜெனிபர் (வயது 22). இவர்கள் 2 பேரும் தனியார் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயபாலனுக்கும், ஜெனிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜெனிபர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெனிபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெனிபருக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. சக்திவேல் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.