காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

4 weeks ago 7
உடுமலைபேட்டையில் உள்ள இன்ஸ்டா காதலிக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து பைக்கில் சென்ற இளைஞர், காதலியுடன் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிச்சிகோட்டை அடுத்த மானுபட்டி பகுதியில் சாலையோர பண்ணைக் குட்டையில் ஒரு சிறுமி இரு இளைஞர்கள் என மூன்று பேரின் சடலங்கள் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குட்டைக்குள் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டதால் 3 பேரும் தவறி விழுந்தார்களா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்று போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்களது கண்கள் மற்றும் உடலில் சில பாகங்கள் மீன்களுக்கு இரையாகி இருந்தது இந்த சம்பவம் தொடர்பாக பைக்கின் பதிவெண்ணை கொண்டு விசாரணையை முன்னெடுத்த போலீசார், சுற்று வட்டார கிராமத்து மக்கள், உறவினர்கள், நண்பர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மூலம் துப்புதுலக்கினர். குட்டையில் சடலமாக கிடந்தவர்கள் குறிச்சிக்கோட்டையை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி , அவரது தாய்மாமன் மாரிமுத்து, சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. சென்னை வேளச்சேரியை சேர்ந்த வை பை ஊழியரான ஆகாஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறிச்சிக்கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. தங்கள் காதல் விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என்பதற்காக மாணவி தனது தாய்மாமன் மாரிமுத்துவையும், ஆகாஷுடன் பழக வைத்துள்ளார். இந்த நிலையில் 18ந்தேதி மாணவிக்கு பிறந்த நாள் என்பதால் சர்பரைஸ் கிப்ட் கொடுக்க திட்டமிட்ட ஆகாஷ், 17ந்தேதி தனது நண்பர் ஜீவானந்தம் என்பவருடன் சென்னையில் இருந்து பைக்கிலேயே உடுமலை பேட்டை சென்றதாக கூறப்படுகின்றது. ஆகாஷும், ஜீவானந்தமும் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது. 17 ந்தேதி மாணவியும், ஆகாஷும் ஒரு பைக்கிலும், ஜீவானந்தமும் , மாரிமுத்துவும் மற்றொரு பைக்கிலும் பழனி, திருமூர்த்தி மலை என்று ஊர் சுற்றியதாக கூறப்படுகின்றது. இரவில் மாணவியை வீட்டில் கொண்டு பத்திரமாக விட்டு விட்டு சென்னை நண்பர்கள் தங்கும் விடுதிக்கு திரும்பினர். 18ந்தேதி காலை ஜீவானந்தம் தனக்கு வேலை இருப்பதாக தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பி உள்ளார். இதனால் மாரிமுத்துவை பைக் எடுத்து வரச்சொல்லி வெளியில் ஊர் சுற்றிய ஆகாஷ், மாலையில் ஐயப்ப சாமிக்கு அணிந்திருந்த மாலையை கழட்டி வைத்து விட்டு , மாரிமுத்துவுடன் சேர்ந்து மூக்கு முட்ட மது அருந்தியதாக கூறப்படுகின்றது. இரவு 10 மணி அளவில் மாணவிக்கு போன் செய்த ஆகாஷ், சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக ஆசைவார்த்தைகூறி அழைத்துள்ளார். அதன் படி போதையில் இருந்த மாரிமுத்துவுக்கும் , ஆகாஷுக்கும் நடுவில் அந்த மாணவியை அமர வைத்து மானுபட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இரவு நேரம் என்பதாலும் , மது போதையில் சாலை சரியாக தெரியாததாலும், மாரிமுத்து ஓட்டிச்சென்ற பைக் அப்படியே சாலையோர குட்டைக்குள் பாய்ந்ததாக கூறப்படுகின்றது. சேரும் சகதியுமாக இருந்த குட்டைக்குள் விழுந்ததால் 3 பேரும் உடனடியாக வெளியே வர இயலாமல் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும், 3 நாட்களுக்கு பின்னர் உடல் அழுகி உப்பியதால் வெளியில் வந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். காதலியின் பிறந்த நாளில் கிப்ட் கொடுக்க சென்றவர் தனது உயிரோடு சேர்ந்து மேலும் இருவரது உயிரிழப்புக்கும் காரணமாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article