காதலர்கள் வருகையால் களைகட்டிய மாமல்லபுரம்

1 week ago 2

 

மாமல்லபுரம், பிப்.15: காதலர் தினத்தையொட்டி, நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மாமல்லபுரம் களைகட்டி காணப்பட்டது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதேப்போல், இந்த ஆண்டு காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காதலர்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் கடற்கரை என பல்வேறு இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழும் மாமல்லபுரத்திற்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நேற்று ஆயிரக்கணக்கான காதல் ஜோடிகள் கார், அரசு பேருந்துகள், பைக் ஆகியவற்றில் வந்து நகரம் முழுவதும் சுற்றித்திரிந்து காதலர் தினத்தை கொண்டாடினர்.

நேற்று காலை முதல் மதியம் 1 மணி வரை குறைந்த அளவிலான காதல் ஜோடிகளே வருகை தந்தனர். பின்னர், மதியம் 2 மணிக்கு பிறகு ஏராளமான காதல் ஜோடிகள் குவியத் தொடங்கினார். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகமான காதல் ஜோடிகள் வந்தனர். பல்லவ மன்னர்கள் கைவண்ணத்தில் செதுக்கிய புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, அவற்றின் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர். முன்னதாக, கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகளில் காதலர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி காதலிக்கு பரிசளித்தனர். ஒருசில, பெண்கள் தங்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில், துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி கடற்கரையில் காதலனுடன் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது.

The post காதலர்கள் வருகையால் களைகட்டிய மாமல்லபுரம் appeared first on Dinakaran.

Read Entire Article