சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வண்ண ரோஜா மலர்கள் வரத்து அதிகரித்து வியாபாரம் களை கட்டியுள்ளது. நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஓசூர், பெங்களூர், ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவில் வண்ண ரோஜா பூக்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. வழக்கமான நாட்களில் 5 முதல் 7 டன் வரை ரோஜா பூக்கள் கொண்டு வரப்படும். தற்போது காதலர் சிறப்பு தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து 10 டன் ரோஜா பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது பூக்களின் விலை அதிகரித்துள்ளது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மஹால் ரக ரோஜா பூக்கள் ரூ.200 முதல் ரூ.400க்கும், நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா ரூ.180 முதல் ரூ.350க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா ரூ.150 முதல் ரூ.300க்கும், ரெட் ரோஸ் ரூ.200 முதல் ரூ.450க்கும், ஜப்பூரா ரூ.40 முதல் ரூ.100க்கும், கலர்ரோஸ் ரூ.150 முதல் ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் சூடு பிடித்துள்ளது என்றார்.
The post காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ரோஜா மலர்கள் குவிப்பு: களை கட்டுகிறது வியாபாரம் appeared first on Dinakaran.