காதலருடனான ஆபாச புகைப்படங்களை அழிக்க... திடுக்கிடும் சதித்திட்டம் தீட்டிய காதலி

2 months ago 28

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 29). இவர் காதலருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து, ஒன்றாக சென்றிருக்கிறார். அப்போது, போகனஹள்ளி என்ற இடத்தில் வணிக வளாகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது மோதி நின்றது.

உடனடியாக, காரில் இருந்து இறங்கிய 2 பேர் சுருதியின் காதலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருவரின் மொபைல் போன்களை பறித்து விட்டு அவர்கள் காரில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த காதலர் வம்சி கிருஷ்ணா ரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, அந்த பகுதியில் அப்படி ஒரு விபத்து நடக்கவேயில்லை என்று போலீசாருக்கு தெரிய வந்தது. இதன்பின்னர், விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் மனோஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார். மொபைல் போன்களை பறித்து செல்வதற்காக, அவருக்கு சுருதி ரூ.1.1 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

அவரே இதற்கான சதித்திட்டம் தீட்டியதும் தெரிய வந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, காதலர் வம்சியுடனான உறவை முறித்து கொள்ள சுருதி முடிவு செய்திருக்கிறார். எனினும், வம்சியுடன் நெருங்கியிருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை வைத்து, வம்சி வருங்காலத்தில் தவறாக பயன்படுத்தலாம் என்ற அச்சம் சுருதிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த புகைப்படங்களை எல்லாம் அழித்து விட்டேன் என்று வம்சி உறுதி கூறியிருக்கிறார். ஆனால், அவர் மொபைல் போனை தர மறுத்தது சுருதிக்கு சந்தேகம் கிளப்பியது. இந்த சூழலில், முன்பு தன்னுடைய வீட்டில் பணியாற்றிய மனோஜை அவர் தொடர்பு கொண்டிருக்கிறார். கொள்ளையை அரங்கேற்ற பணம் கொடுத்திருக்கிறார். எனினும், கூடுதல் உதவி தேவைப்படும் என மனோஜ் கூறியிருக்கிறார்.

இதனால், ரூ.1.1 லட்சம் வரை பணம் கொடுத்து வேலையை முடிக்கும்படி கூறியிருக்கிறார். மனோஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 4 பேரும் சேர்ந்து மொபைல் போன்களை பறித்ததும், சுருதியிடம் அன்றிரவே அவற்றை ஒப்படைத்து விட்டனர். எனினும், பாஸ்வேர்டு இருந்த மொபைல் போனை சுருதியால் திறக்க முயற்சித்தும் முடியவில்லை. கடைசியாக அதனை சிங்கசாண்டிரா ஏரியில் தூக்கி போட்டு விட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், மனோஜ் குமார், சுரேஷ் குமார், ஹொன்னப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காதலருடனான ஆபாச புகைப்படங்களை அழிப்பதற்காக போலியான விபத்து ஒன்றை ஏற்படுத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article