சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம், உழவர்களுக்கு உறுதுணையாக இருந்து விவசாயத்திற்கு பேருதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படட்டது.
இதையடுத்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மதியம் வரை சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்தனர். தொடர்ந்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து, அங்கிருக்கும் வன விலங்குகளை பார்வையிட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல இலவச வாகன வசதி சேவை செய்யப்பட்டுள்ளது.