சென்னை, ஜன.17: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையொட்டி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காணும் பொங்கலை முன்னிட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு நேற்று காலை முதல் பைக், கார், பேருந்துகளில் படையெடுத்தனர்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகள் மற்றும் திவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பொருட்காட்சிகளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் 16 ஆயிரம் போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மெரினா பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரையிலான கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கடலில் இறங்காதப்படி சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காணாமல் போனால் அவர்களை மீட்கும் வகையில் பெருநகர காவல்துறை சார்பில் 10 ஆயிரம் கை பட்டைகள் தயாரித்து, பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளுக்கு போலீசார் கட்டினர்.
இதன் பயனாக மெரினாவில் மாயமான 14 குழந்தைகளை தவறவிட்ட பெற்றோர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் அளித்த புகாரில் ஒலி பெருக்கி மூலம் உடனுக்குடன் அறிவிப்பு செய்யப்பட்டு சில மணி நேரத்தில் மாயமான 19 குழந்தைகளையும் போலீசார் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பைக் ரேஸ் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைத்து நடவடிக்கை எடுத்தனர். கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தனியார் பொழுது போக்கு பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
The post காணும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவிந்த மக்கள்: மாயமான 19 குழந்தைகள் கைப் பட்டைகள் உதவியால் உடனுக்குடன் மீட்பு appeared first on Dinakaran.