சென்னை: காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமான விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பிலும், மாசுகட்டுப்பாடு வாரியத்தின் தரப்பிலும், மாநிலத்தில் பெரும்பாலான ஊர்களில் காணும் பொங்கல் தினத்தில் கூடிய மக்களால் ஏற்படும் குப்பை அடுத்த நாளோ, அதற்கு மறுநாளோ முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது என குறிப்பிட்டனர்.
இதனை கேட்ட தீர்ப்பாயம், காணும் பொங்கலுக்கு திரளும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் அறிவிக்கப்படுவதைப் போல், குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் அறிவிக்க கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
The post காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை? அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.