துரைப்பாக்கம்: காணும் பொங்கலை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று 80 ஆயிரம் பேர் குவிந்தனர். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில், அதிகளவில் பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தளங்கள், கோயில்கள், திரையரங்குகள், ரெஸ்டாரண்டுகள், முட்டுக்காடு படகு குழாம் உள்ளன. பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் சுற்றுலா தலங்கள் கோயில்களுக்கு செல்வது வழக்கம். வழக்கமாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் பொதுமக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்கிற்கு வந்து விடுமுறை நாட்களை பொழுதை கழித்து செல்வர்.
காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே ஆயிரக்கணக்கானோர் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் வந்து குவிந்ததால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் மக்கள் கூடுவதால் முன்னெச்சரிக்கை காரணமாக போலீசார் அவ்வழியே வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், ஆங்காங்கே சாலை தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் கடற்கரைகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள் நிரம்பின. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில், சோழிங்கநல்லூர் பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட கோயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நேற்று வந்தனர். பூங்கா நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, அனைத்து பார்வையாளர்களின் வசதியையும் உறுதிப்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது. பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், இலவச வை-பை வசதியும் வழங்கப்பட்டது. கூடுதலாக, பண பரிவர்த்தனைகளுக்கு தனி கவுன்டர்கள் இருந்தன. தனி டிக்கெட் கவுன்டர்களும் அமைக்கப்பட்டது.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு 8000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. வாகன நிறுத்ததுமிடத்திலிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர இலவச பேருந்து வசதி அமைத்து தரப்பட்டது. சுமார் 6000க்கும் மேற்பட்ட 8 வயதுக்குட்பட்ட குழந்தை பார்வையாளர்களுக்கு பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது. கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 24 உயர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
நான்கு இடங்களில் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கொண்ட மருத்துவ குழு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இதை, 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பயன்படுத்தினர். ஒரு தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிசிடிவி அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு கூட்டத்தை வழிநடத்த சரியான வழிமுறைகள் வழங்கப்பட்டன. 90 சீருடை அணிந்த வன ஊழியர்கள், 150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 என்சிசி மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.
பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்த பூங்காவின் முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிசெலுத்தல் பலகைகள் நிறுவப்பட்டன. பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல தனி வழியும், வெளியேறி பேருந்து நிறுத்தத்தை அடைய தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம், பார்வையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட்டமாக அமைய சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* பூண்டி, பழவேற்காட்டில் அலைமோதிய கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட மக்களின் மெரினாவாக கருதப்படுவது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் இந்த நீர்த்தேக்கம் கடந்த சில ஆண்டுகளாக மழை காலங்களில் நிரம்பி விடுவதால், தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்பதாலும், காணும் பொங்கல் தினம் என்பதாலும் நேற்று ஏராளமானோர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் குவிந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உபரி நீர் செல்லும் பகுதியில் யாரும் குளிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் செல்போனில் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழந்தனர்.
பழவேற்காட்டிலும் காணும் பொங்கலை முன்னிட்டு காலை 9 மணி முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல்துறை, வருவாய்த்துறை, கடலோர காவல் படை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, பழவேற்காடு பகுதி கிராம நிர்வாகிகள், நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், ஒலிப் பெருக்கிகள் மூலம் எச்சரித்தும் அறிவிப்புகளை வெளியிட்டனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு காவல்துறையினர் வாகனங்களை சீர் செய்து அனுப்பினர்.
The post காணும் பொங்கல் கொண்டாட்டம் சுற்றுலா தலங்களில் மக்கள் வெள்ளம்: இசிஆர் பொழுதுபோக்கு மையங்கள் நிரம்பி வழிந்தது; வண்டலூர் பூங்காவில் 80 ஆயிரம் பேர் குவிந்தனர் appeared first on Dinakaran.