பால்கர்,
மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த கிராம வாசிகள் சிலர் வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த ஜனவரி 29 அன்று பன்றியை வேட்டையாட மனோர் பகுதியில் உள்ள போர்ஷெட்டி வனப்பகுதிக்கு வேட்டைக்குழுவினர் சென்றனர். அப்போது விலங்குகளை வேட்டையாட இரண்டு பிரிவாக பிரிந்து சென்றனர்.
இதில் ஒரு குழு விலங்குகளுக்காக மறைவான பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது மறுபக்கத்தில் இருந்து காலடி சத்தம் கேட்டது. இன்று சரியான வேட்டைதான் என்று எண்ணிய வேட்டைக்காரர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
பின்னர் மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியேறி பன்றியை பார்க்க அருகில் சென்றனர். அங்கு சென்ற அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காட்டுப்பன்றி என நினைத்து இரு மனிதர்களை சுட்டதை உணர்ந்தனர். இதில் போர்ஷெட்டியை சேர்ந்த ரமேஷ் வர்தா (வயது 60) சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட வேட்டை குழுவினர் பயத்தில் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் அதற்கு பதிலாக உடலை புதர்களுக்குள் இழுத்துச் சென்று மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வர்தாவின் மனைவி திங்கள் அன்று காணாமல் போன வர்தா குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு குழு காட்டுக்கு வேட்டையாட சென்றதாக தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வனப்பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இறந்தவரின் உடலானது சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வேட்டை குழுவினரான 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காலடி சத்தத்தை கேட்டு பன்றி என தவறாக நினைத்து சுட்டுக்கொன்றதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே துப்பாக்கி சூட்டில் சிக்கிய மற்றொரு கிராமவாசி காயமடைந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வதந்திகள் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.