காட்சி பொருளாக மாறியுள்ள வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்ட்

2 hours ago 2

கிருஷ்ணகிரி, நவ.28: அடிப்படை வசதிகள் இல்லாததால், காட்சிப்பொருளாக மாறியுள்ள வேப்பனஹள்ளி பஸ் நிலையம் குடிமகன்களின் கூடாரமாகி உள்ளது. இதனை சீரமைத்து, பஸ்கள் வந்து செல்லும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி, தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனால், தினந்தோறும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள், அன்றாட வேலைகளுக்காகவும், மருத்துவமனைக்கும், பொருட்களை வாங்கி செல்லவும் வேப்பனஹள்ளி பகுதிக்கு வருகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, கடந்த 2007ம் ஆண்டு வேப்பனஹள்ளியில் பஸ் நிலையம் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த பஸ் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பஸ்கள் ஏதும் உள்ளே வந்து செல்லவில்லை. இதனால், பஸ் நிலையம் பயன்பாடின்றி கிடக்கிறது. தற்போது, குடிமகன்களின் கூடாரமாகவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் வாகனங்களை நிறுத்துமிடமாகவும் மாறி உள்ளது. ஆந்திர மாநில எல்லையில் அமைந்திருப்பதால், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக 103 டிகிரி வெயில் கொளுத்துகிறது. இந்த மூன்று மாநிலங்களில் இருந்தும், கிராம மக்கள் வேப்பனஹள்ளிக்கு வந்து பணிகளை முடித்து கொண்டு, நாச்சிகுப்பம், தீர்த்தம், நேரலகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், கேஜிஎப், கோலார், மாலூர், குப்பம், குடிப்பள்ளி, மாதேப்பள்ளி, கிருஷ்ணகிரி, சூளகிரி, குந்தாரப்பள்ளி பகுதிகளுக்கு செல்ல வேப்பனஹள்ளியில் தான் பஸ்களில் ஏற வேண்டியுள்ளது.

இவ்வாறு பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள், நிழற்கூடை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் தவித்து வருகின்றனர். மேலும், இங்கு வரும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சாலை மார்க்கமாகவே செல்வதால், பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள கடைகளின் முன்பு நின்றபடி, பஸ்களுக்கு காத்திருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே, வேப்பனஹள்ளி-குப்பம் கூட்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை, வாகனங்கள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், அதனால் பயணிகளுக்கு எந்த பயனுமில்லை. எனவே, வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகளுக்கு தற்காலிக நிழற்கூடம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இப்பகுதி பயணிகளின் கோரிக்கையினை ஏற்று, குப்பம் கூட்ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட நிழற்கூடத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், கிருஷ்ணகிரி மார்கமாக பஸ்கள் செல்லும் இடத்தில், சாலையோரமாக நிழற்கூடம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

The post காட்சி பொருளாக மாறியுள்ள வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article