காடை வளர்ப்பில் கலக்கும் பிபிஏ பட்டதாரி!

2 weeks ago 5

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டபிரபு பிபிஏ படித்திருக்கிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பொழுதுபோக்காக சண்டைக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் சில காரணங்களால் காடை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது அந்தக் காடை வளர்ப்பு அவருக்கு ஒரு லாபகரமான தொழிலாக மாறி இருக்கிறது. ஆம். மாதம் 30 ஆயிரம் வழங்கும் கலக்கலான தொழிலாக மாறி இருக்கிறது காடை வளர்ப்புத் தொழில். இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தார்? இப்போது தொழில் எப்படி இருக்கிறது? என ஒவ்வொன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். “சண்டைக்கோழிகள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். என்னதான் சண்டைக்கோழிகள் வளர்த்தாலும் அதில் வருமானம் என்று பெரிதாக எதுவும் இருக்காது. சேவல்களைத் தயார் செய்வதில் செலவுதான் இருக்குமே தவிர லாபம் எதுவும் இருக்காது. இதைக் கவனத்தில் கொண்டுதான் என்னுடைய அப்பா அய்யப்பனும், அம்மா ஜெயராணியும் கொடுத்த நம்பிக்கையில் காடை வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தேன். அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக விரும்புவது காடை இறைச்சியைத்தான். காடைக்கு அனைத்து நேரத்திலும் டிமாண்ட் இருக்கும். இதனால் நிறைய பேர் காடை வளர்ப்புத் தொழிலில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

நான் காடை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியபோது சேலம், நாமக்கல், கும்பகோணம் பகுதியில் இருந்து ஒருநாள் வயதுடைய காடைக் குஞ்சுகளை கொண்டு வந்து வளர்த்து விற்பனை செய்தேன். இப்போது நானே காடை முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து குஞ்சு பொரிக்க வைத்து, அதனை வளர்த்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன். கடந்த வாரம்தான் புரட்டாசி மாதம் முடிந்தது. அடுத்த மாதம் சபரிமலை சீசன் துவங்க இருக்கிறது. இந்த சமயத்தில் அசைவ விற்பனை மந்தமாக இருக்கும். அதற்குப் பின்னர் காடை முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து வளர்க்கலாம் என திட்டமிட்டு இருக்கிறேன். காடைகளை வளர்க்க அதிக இடம் தேவைப்படாது. ஒரு சதுர அடியில் 5 காடைகள் வரை வளர்க்கலாம். கோழிகள், ஆடுகளை விட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் அனைத்து தட்பவெப்ப நிலையிலும் வளரும் தன்மை கொண்டது. மேலும் இதற்கு மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது. காடைக் குஞ்சுகள் 28 முதல் 30 நாட்களுக்குள் இறைச்சிக்கு தயாராகி விடுவதால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலேயே வருமானம் பெற முடியும்.

காடைகளை ஆழ்கூள முறை, கூண்டு முறை என இரண்டு வகைகளில் வளர்க்கலாம். ஒரு சதுர அடிக்கு ஆறு காடைகள் வரை வளர்க்கலாம். முதல் இரண்டு வாரம் ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். பின்னர் அவற்றைக் கூண்டுகளுக்கு மாற்றி வளர்க்கலாம். இந்த ஆழ்கூளத்தில் நன்கு காய்ந்த மணல் கீழாகவும் ஈரத்தை உறிஞ்சக்கூடிய காய்ந்த தென்னை நார்க் கழிவு அல்லது நிலக்கடலை தோல், மரத்தூள் ஆகியவற்றை மேலாகவும் பரப்ப வேண்டும். சுமார் 5 முதல் 10 செமீ உயரத்துக்கு ஆழ்கூளம் இருக்க வேண்டும். காடைகளைக் கம்பிவலைக் கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால் முதல் வாரத்தில் கூண்டின் அடிப்பகுதியில் கெட்டியான அட்டைகளை விரிக்க வேண்டும். இப்படி செய்வதால் கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகள் வரை அமைத்து ஒவ்வொரு கூண்டுக்கும் கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த வேண்டும். ஒருநாள் வயதுடைய குஞ்சுகளை ப்ரூடரில் வைத்து வளர்த்து 7 நாட்களுக்கு பின்னர் ஆழ்கூள முறையில் அமைக்கப்பட்ட 10க்கு 10 அறையில் ஆயிரம் குஞ்சுகள் வரை வளர்ப்பேன்.இதில் குஞ்சுகளுக்கு தேவையான தீவனம் மிகவும் நைசாக இருக்க வேண்டும். காடைகளுக்கு அருகில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தீவனம் கொடுப்பேன். அந்தத் தீவனத்தில் மக்காச்சோளம், அரிசி, தவிடு, கடலைப் புண்ணாக்கு போன்றவற்றை கலந்து கொடுப்பேன். சுத்தமான தண்ணீரை காடைகளுக்கு வழங்க வேண்டும். இதுபோல் 2 ஆழ்கூள அறைகளில் சுமார் 1600 குஞ்சுகள் வரை வளர்த்து வருகிறேன். காடைகளுக்கு 22வது நாளில் ஸ்டார்ட்டர் தீவனம் வைப்பேன். 28 லிருந்து 32 நாட்கள் நன்கு வளர்ந்த காடைகளை விற்பனை செய்வேன்.

நாங்களே நேரடியாக வல்லம் கடைத்தெரு மற்றும் மருத்துவக்கல்லூரி சாலையில் விற்பனை செய்கிறோம். மேலும் எங்களின் வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்தும் வாங்கிச் செல்வார்கள். பட்டுக்கோட்டை உட்பட தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேரடியாக வாடிக்கையாளர்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். 100க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர். கடைகளுக்கு விற்பனை செய்தால் ஒரு காடையை ரூ.45 என கொடுப்போம். ஆனால் நாங்களே நேரிடையாக விற்பனை செய்வதால் ஒரு காடையை ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்கிறோம். நாங்கள் விற்கும் காடைகள் 200 கிராம் வரை எடை இருக்கும். வாராவாரம் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியாக விற்கிறோம். வாரத்திற்கு 120 காடைக் குஞ்சுகள் முதல் 150 குஞ்சுகள் வரை விற்பனையாகும். சராசரியாக ஒரு வாரத்திற்கு ரூ.7 ஆயிரம் வருமானம் கிடைக்கும். காடைகள் விற்பனை மூலம் மாதத்திற்கு ரூ.28 ஆயிரம் வரை கிடைக்கும். இதில் தீவனச் செலவு, பராமரிப்பு செலவு என்று பெரிதாக எதுவும் இருக்காது. அதிகபட்சமாகவே ஒரு மாதத்திற்கு ரூ.1000 செலவு ஆகும்.

நன்கு வளர்ந்த குஞ்சுகள் போடும் முட்டைகளையும் முன்பு சேகரித்து விற்பனை செய்து வந்தேன். தற்போது முட்டைகள் அனைத்தையும் இன்குபேட்டரில் வைத்து காடைக்குஞ்சுகளாக பொரிக்க வைத்து விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதற்கான இன்குபேட்டர்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். சிறிய இடமாக இருந்தாலும் கோழி ரகங்களையும் வளர்த்து வருகிறேன். தற்போது நாட்டுக்கோழிகள் 150, வான்கோழிகள்-8, கின்னிக்கோழிகள் 4 என்ற கணக்கில் வளர்த்து வருகிறேன். நாட்டுக்கோழிகளுக்கு தினமும் தேங்காய்ப் புண்ணாக்கு, உடைத்த அரிசி, கோதுமைத் தவிடு, கடலைப்புண்ணாக்கு ஆகியவற்றை தீவனமாக கொடுத்து வருகிறேன். நன்கு வளர்ந்த நாட்டுக்கோழிகள் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனையாகும். செலவுகள் போக காடை மற்றும் நாட்டுக்கோழி விற்பனை மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. காடை வளர்ப்பு மற்றும் விற்பனைக்கு எனது அப்பா, அம்மா, தம்பி பொன்னியின் செல்வன் ஆகியோர் உதவியாக இருக்கிறார்கள். வரும் நாட்களில் நாங்களே காடை முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து காடை உற்பத்தியை அதிகளவில் செய்ய இருக்கிறோம். சரியான முறையில் கவனமாக வளர்த்து நேரடியாக விற்பனை செய்தால் காடை வளர்ப்புத் தொழில் மிகுந்த லாபகரமான தொழில்தான்” என நம்பிக்கை பொங்க கூறுகிறார்.

தொடர்புக்கு: மணிகண்ட பிரபு – 91597 09332.

*காடை முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் மிகுதியாக உள்ளது. அதோடு விட்டமின் பி1 , விட்டமின் பி2 மற்றும் விட்டமின் ஏ ஆகியவையும் நிறைந்து காணப்படுகிறது. கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது. இதில் உள்ள மிகுதியான ஊட்டச்சத்து காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

*காடைக்குஞ்சுகளுக்கு தேவையான தீவனம் மிகவும் நைசாக இருக்க வேண்டும். காடைகளுக்கு அருகில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும்.

The post காடை வளர்ப்பில் கலக்கும் பிபிஏ பட்டதாரி! appeared first on Dinakaran.

Read Entire Article