காஞ்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம்

1 week ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் லெனின், அரசு ஊழியர்களின் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் துரை.மருதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர் நீதிமன்றம் அணையின்படி பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்.

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்து இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையை பணி வழங்கி நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் 25% வழங்கப்பட்டு வந்ததை தமிழக அரசு 5% குறைத்திருப்பதை கைவிட்டு 25% வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும், நிறைவேற்றாவிட்டால் 15வது மாநில மாநாடு அறைக்கூவல் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த, தர்ணா போராட்டமானது நேற்று தொடங்கி இன்று காலை 10 மணி வரை முடியும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

The post காஞ்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article