காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 17ம்தேதி தேர்த்திருவிழா

18 hours ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. வரும் 17ம்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு வைகாசி பிரமோற்சவ விழா இன்று அதிகாலை காலை 4.20 மணிக்கு துவங்கியது. கோயில் பட்டாச்சாரியார்கள் கருடாழ்வார் பொறித்த சின்னத்தை கொடிமரத்தில் ஏற்றி விழாவை தொடங்கிவைத்தனர்.

விழாவை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பேண்ட் வாத்தியம் முழங்க வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை சிம்ம வாகனத்தில் முக்கிய வீதிகளில் வரதராஜபெருமாள் வீதிஉலா வருகிறார். இதையொட்டி கோயில் கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

2வது நாளான 12-ந்தேதி அம்ச வாகனம், சூரிய பிரபை வாகனத்தில் உலா வருகிறார். 13ம்தேதி உலக பிரசித்திபெற்ற கருட சேவை உற்சவம் நடக்கிறது. 14ம்தேதி சேஷ வாகனம், சந்திரபிரபை, 15ம்தேதி தங்க பல்லக்கு, யாழி வாகனம், 16ம்தேதி தங்க சப்பரம், யானை வாகனம், 17ம்தேதி மிகவும் பிரசித்தி பெற்ற தேர்த்திரு விழா நடக்கிறது. உலகில் 2வது உயரமான தேரில் வரதராஜ பெரு மாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கச்சிநம்பி தெரு, மூங்கில் மண்டபம், காந்தி ரோடு, காமராஜர் வீதி, இந்திரா காந்தி சாலை, பஸ் நிலையம் உட்பட முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

18ம்தேதி திருமஞ்சனம், குதிரை வாகனம், 19ம்தேதி தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், 20ம்தேதி தவாத்சாராசனம், வெட்டிவேர் சப்பரம் ஆகிய தேர்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் கார்த்திகேயன், செயல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர். விழாவையொட்டி மாவட்ட எஸ்பி சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 17ம்தேதி தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Read Entire Article