காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள சோமஸ்கந்தர் உலோக சிலை அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு: சிலையை மீட்க போலீசார் நடவடிக்கை

3 months ago 19

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 18ம் நூற்றாண்டை சேர்ந்த ₹8 கோடி மதிப்புள்ள சோமஸ்கந்தர் உலோக சிலை அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தொண்மையான ஐம்பொன் சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் விற்பனைக்காக இணையதளங்களில் ஏலம் விடும் சிலைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், இணையதள தேடலில் வடக்கு மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸ்சிஸ்கோ பகுதியில் ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் ஒரு உலோக சோமமஸ் கந்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தார். உடனே அந்த சிலை குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் மாயமான சோமஸ்கந்தர் சிலை போன்று இருப்பதை கண்டனர். ஆனால் அந்த சிலை கிபி 1500 முதல் 1600 ஆண்டுகள் என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேநேரம், சிலையின் பீடத்தில் தெலுங்கு மொழியில் இந்த சிலையை தொண்டை மண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி என்பவரால் தானம் செய்யப்பட்டது என்றும் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமானது என்றும் பொறிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து அதிகாரிகள், கல்வெட்டு ஆய்வாளர்களின் உதவியுடன் சிலையின் புகைப்படத்தை வைத்து ஆய்வு செய்த போது, அது 18ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், இந்த சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலில் இருந்து அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் திருடப்பட்டு பின்பு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் விற்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள சோமஸ்கந்தர் உலோக சிலை அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு: சிலையை மீட்க போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article