காஞ்சிபுரத்தில் இருந்து ஒரக்காட்டுபேட்டை செல்லும் வழியில் உள்ள சாத்தணஞ்சேரியில் முப்போகமும் ஏதாவது விவசாயம் நடந்தபடி இருக்கும். ஆனால் இந்த ஊரின் பிரதானப்பயிர் என்றால் அது கரும்புதான். இப்பகுதியில் உள்ள சுமார் 900 ஏக்கர் விவசாய நிலங்களில் கரும்பு விளைவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிகப்படியான கரும்பு உற்பத்தி செய்யும் இடமாக இருப்பதுடன், சர்க்கரை ஆலைகளுக்கு அதிகப்படியான கரும்பினை அனுப்பி வைக்கும் கிராமம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது சாத்தணஞ்சேரி. இப்படி கரும்பு கிராமமாக விளங்கும் சாத்தணஞ்சேரியில், தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், முன்னோடி கரும்பு விவசாயியாகவும் விளங்கும் தனபால் கரும்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் தனபாலைச் சந்திக்க அவரது கரும்புத் தோட்டத்திற்கு சென்றோம். எங்களை வரவேற்ற தனபால், தனது தோட்டத்தை சுற்றிக் காண்பித்தபடியே அவரைப் பற்றியும் அவரது சாகுபடி முறை பற்றியும் பேசத் தொடங்கினார்.
“ நெல், மஞ்சள், எள், உளுந்து என பல பயிர்களை இங்கு விவசாயம் செய்கிறோம். இருந்தாலும் கரும்புதான் அடிக்கடி நாங்கள் சாகுபடி செய்யும் பயிராக இருக்கிறது. எனக்கு 75 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளில் பலவகையான பயிர்களை விளைவித்து மகசூல் எடுத்திருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக கரும்பை மட்டும் விடாமல் தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன். தற்போது எனது நிலத்தில் பத்து ஏக்கரில் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே கரும்பு உற்பத்தி சார்ந்தும் அதன் வளர்ச்சி சார்ந்தும் ஆராய்ச்சி செய்தபடி இருக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடித்த விசயமாகவும் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக கரும்பு சார்ந்து நிறைய ஆராய்ச்சி செய்து பலவகையான கட்டுரைகள் எழுதி வைத்திருக்கிறேன். நான் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து கரும்பு பயிரிட இதுதான் முக்கிய காரணம்.
கரும்பைப் பொதுவாக இரண்டு வகைகளில் பயிர் செய்வார்கள். அதில் ஒன்று நடவு முறை. மற்றொன்று மறுதாம்பு முறை. கரும்பை சாகுபடி செய்து அறுவடை செய்யும்போது, கரும்பின் அடிப்பாகத்தை அப்படியே நிலத்தில் விட்டுவிட்டால் மீண்டும் அதில் இருந்து புதிதாக கரும்பு முளைத்து வரும். இதை வளர்த்து வெட்டி மகசூல் எடுக்கலாம். இதுதான் மறுதாம்பு கரும்பு பராமரிப்பு முறை. இந்த மறுதாம்பு முறையில் அதிகப்படியாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கரும்பு சாகுபடி செய்யலாம். ஆனால் நான் எனது ஆராய்ச்சிக்காக ஒருமுறை நடவு செய்த கரும்பில் இருந்து தொடர்ந்து 17 ஆண்டுகள் மறுதாம்பு முறையில் கரும்பு சாகுபடி செய்து சாதனை செய்திருக்கிறேன்.கரும்பு நடவில் இரண்டு மூன்று வகைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் நடவு செய்வது, அகலப்பாதை முறையில் நடவு செய்வது, நான்கு அடி பார் இடைவெளியில் நடவு செய்வது என வெவ்வேறு நடவு முறை இருக்கிறது. இந்த ஒவ்வொரு நடவு முறைக்கும், விதைக்கரும்புகளின் அளவு மாறிக்கொண்டே போகும்.
நான் பெரும்பாலும் எனது நிலத்தில் உள்ள கரும்புகளை மேற்சொன்ன அனைத்து முறையிலும் நடவு செய்திருக்கிறேன்.எனது 10 ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 ஏக்கரில் எந்த உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் அதன் போக்கிலே வளர விடுகிறேன். மீதமுள்ள கரும்பை அடி உரம் மற்றும் இயற்கை உரம் இட்டு வளர்த்து வருகிறேன். அதாவது, நிலத்தில் கரும்பு சாகுபடியை தொடங்குவதற்கு முன்பாக நிலத்திற்கு அடி உரம் கொடுப்பது முக்கியம். அதனால் இயற்கை முறையில் அடிஉரம் கொடுப்பதற்கு நிலத்தை ஒருமுறை நன்றாக உழுது சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை விதைத்து, அவை பூக்கும் சமயம் வந்தபிறகு நிலத்தில் மடக்கி உழுவேன். அதன்பிறகு நிலத்தை நன்றாக காயப்போட்டு மீண்டும் ஒருமுறை உழுது தொழுஉரங்களைக் கொட்டி மறுபடியும் உழுது கரும்பு நடவைத் தொடங்குவேன்.
இப்படி வளர்கிற கரும்பு ஒரு ஆண்டில் முழுக்கரும்பாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகும். மறுதாம்பு முறையில் கரும்பு சாகுபடி செய்தால், 10 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இதற்கிடையில் கரும்பு வளர்ச்சிக்காக சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, கரும்பு சாகுபடி தொடங்கிய முதல் மாதம் கழித்து கரும்புக்கு இடையே உளுந்து, எள் போன்ற ஊடுபயிர்களை விதைத்து வளர்த்து வந்தால் கரும்பும் நல்ல முறையில் வளரும். மண்ணின் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இந்த முறையில் நான் வளர்க்கிற கரும்புகளில் இருந்து ஏக்கருக்கு 55 – 60 டன் வரை மகசூல் எடுக்க முடிகிறது. அறுவடை செய்யப்படுகிற கரும்புகளை எங்கள் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு டன் ரூ.3500 என்ற விலையில் அனுப்பி வைக்கிறோம். இதில் உழவு, உரம், அறுவடை என நிறைய செலவு இருக்கிறது. அதுபோக, போதுமான வருமானமும் கிடைக்கிறது’’ என பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
தனபால்: 90032 51050
ஆர்கிய பாக்டீரியா கரைசல்
அமுதக்கரைசல், மீன்கரைசல் போல இயற்கை விவசாயத்திற்கு நல்ல ஊட்டம் கொடுக்கும் மற்றொரு கரைசல்தான் ஆர்கிய பாக்டீரியா கரைசல். இயற்கை விவசாயத்தில் மண்வளத்தை மேம்படுத்தவும், பயிர்களின் வேர் வளர்ச்சிக்காகவும் இது பெரிய அளவில் துணைபுரியும். இது மண்ணில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து பயிர் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் தங்கள் வீட்டில் அல்லது நிலத்தில் இதைத் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
பசும்பால் 1 லிட்டர், தயிர் 100 மில்லி நாட்டுச் சர்க்கரை 100 கிராம், நன்னீர் (நிலக்கிணறு அல்லது குடிநீர்) 10 லிட்டர் கெட்டியான பிளாஸ்டிக் டிரம் அல்லது கலசம் 15 லிட்டர் கொள்ளளவு.
தயாரிக்கும் முறை
நாட்டுச்சர்க்கரையை நன்றாக அரைத்து 1 லிட்டர் நீரில் கரைக்கவும். அந்த நீரில் பசும்பால், தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை 10 லிட்டர் நன்னீரில் சேர்த்து முழுமையாக கலக்க வேண்டும். டிரம்மின் வாயை காற்றோட்டம் இருக்கும் வகையில் நன்றாக மூடி (பூஞ்சை தட்டாமல் பாதுகாக்க) வைக்கவும். மூன்று நாட்கள் வரை நிழலில் வைத்துக் கிளறிக் கிளறி வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இரண்டு முறை நன்றாக கிளற வேண்டும். மூன்றாவது நாளில் ஆர்கிய பாக்டீரியா கரைசல் தயார்.
கரும்பு சாகுபடிக்கு ஒரு சிறப்பான இயற்கை உரம் தயாரிக்க வழி சொல்கிறார் விவசாயி தனபால். அதாவது, கரும்பைக் கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் ஆலை அழுக்கு மற்றும் கரும்பு தோகைகளை மண்ணில் குழி தோண்டி ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளில் போட்டு அதன்மீது யூரியா மற்றும் பொட்டாஷைத் தூவி மட்கச் செய்ய வேண்டும். அதன்பின் அவற்றை உரமாக பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும்’ என்கிறார்.
The post காஞ்சிபுரத்தில் ஒரு கரும்பு கிராமம்! appeared first on Dinakaran.