
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார்.
சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் நடைபெற்றது. இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து கோவியில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
கருடாசனம் நிலையில் அமர்ந்து ஸ்ரீ கணேச சர்மா குருவை வணங்கினார். ஸ்ரீ கணேச சர்மாவுக்கு சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு தண்டத்தை வழங்கினார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக கோவிலில் இருந்து கொல்லா சத்திரம், ராஜ வீதி வழியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் ஊர்வலமாக சங்கர மடத்துக்கு காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர். சங்கர மடம் வந்து சேர்ந்ததும் இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார். இந்த விழாவுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.