காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக கணேச ஷர்மா பொறுப்பேற்பு: நீதிபதி, ஆளுநர் பங்கேற்பு

23 hours ago 4

சென்னை: காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக கணேச ஷர்மா டிராவிட் நேற்று பொறுபேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பஞ்சகங்கா குளத்தின் காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பதவியேற்பு மற்றும் சன்னியாசி தீட்சை வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு, தற்போதைய 70வது மீடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த குளத்தில் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

இதில் ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோர், கோயில் குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், 2 பேரும் இணைந்து, மூலவர் காமாட்சியம்மனை தரிசித்தனர். அப்போது, சங்கராச்சாரியார் விஜயேந்திரர், மடாதிபதி சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட்டுக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பின்னர், மடாதிபதிகள் இருவரும் காமாட்சியம்மன் கோயிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு, இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு, 71வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையொட்டி, காமாட்சியம்மன் கோயில் வளாகமும், சங்கர மடமும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சுதா சேஷய்யன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக கணேச ஷர்மா பொறுப்பேற்பு: நீதிபதி, ஆளுநர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article