‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் காவியைப் புகுத்தும் ஒன்றிய அரசு; பாஜ அரசின் மதவாத பிரசாரத்தை முறியடிக்க மாணவர்களிடையே பகுத்தறிவு பிரசாரம்: திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு

3 months ago 7


சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ‘காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2022 ஆண்டு முதல் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாசிச பாஜ அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘அகத்திய முனி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று சென்னையில் அகத்திய முனிவர் நடைப்பயணம் என்ற பெயரில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அகத்தியர் வேடமிட்டு நடைப்பயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் மதவெறி அரசியலை முன்னிறுத்தும் பாஜ தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவெறி நஞ்சை விதைக்கத் தொடங்கி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பள்ளிக் கல்வித் திட்டத்திற்கான நிதி ரூ2,152 கோடியை பறித்து, வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டிப் போட்டு முன்னேறி வரும் நிலையில், இங்குள்ள ஒன்றிய பாஜ அரசு கல்வியில் மதத்தைத் திணிக்கும் பிற்போக்குத்தனத்திற்கு இட்டுச் செல்கிறது. கல்வியை காவி மயமாக்கும் பாஜவின் இத்தகைய சதி திட்டத்திற்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது. மேலும், அறிவியலுக்கு எதிரான பாஜவின் மதவாதப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலோடு, திமுக மாணவர் அணி சார்பில் மாணவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் காவியைப் புகுத்தும் ஒன்றிய அரசு; பாஜ அரசின் மதவாத பிரசாரத்தை முறியடிக்க மாணவர்களிடையே பகுத்தறிவு பிரசாரம்: திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article