காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

1 day ago 2

காசா,

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படாத சூழலில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ந்தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து காசா முனையின் கான் யூனிஸ், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தலைவர் சலாஹ் அல்-பர்தாவில் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், தெற்கு காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கி இருந்ததாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புக்கு ஹமாஸ் அமைப்பினரே காரணம் எனவும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அவர்கள் இயங்கி வருவதால் தாக்குதலின்போது அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

நாசர் மருத்துவமனை உள்பட, காசா முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனை கட்டிடங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன. இதுவரை இஸ்ரேல்-காசா போரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article