காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: பலி எண்ணிக்கை 404 ஆக உயர்வு

4 hours ago 4

 

காசா முனை,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் இதுவ்ரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.

இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், மீண்டும் போர் தொடங்கும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

Read Entire Article