இந்தூர் ‘பணம், மதுபானம், பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் மறுஜென்மத்தில் மிருகமாகத்தான் பிறப்பார்கள்’ என மபியில் பாஜ எம்எல்ஏ உஷா தாக்கூர் சாபமிட்ட சம்பவம் வைரலாகி உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த மவ் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான உஷா தாக்கூர், தனது தொகுதிக்கு உட்பட்ட ஹசல்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உஷா தாக்கூர் பேசுகையில், ‘‘பாஜ ஆட்சியில் பெண்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் மூலம் தலா ரூ.1000 வழங்கப்படுகிறது.
அப்படியிருந்தும், ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் ஆசைப்பட்டு உங்கள் ஓட்டுக்களை விற்றால் அது மனித இனத்திற்கே அசிங்கம். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் யார், பணத்தையும், மதுவையும், பரிசுப் பொருளையும் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்களோ அவர்கள் அடுத்த பிறவில் நாய், பூனை, ஒட்டகம், ஆடாகத்தான் பிறப்பார்கள். இதை உங்கள் டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்’’ என கூறியதோடு, ‘‘நான் கடவுளிடம் நேரடியாக பேசுபவள், நம்புங்கள்’’ என பெரிய குண்டையும் தூக்கி போட்டுள்ளார். இதெல்லாம் பிற்போக்குத்தனமான பேச்சு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
The post காச வாங்கி ஓட்டு போட்டா மிருகமா தான் பொறப்பீங்க: சாபம் விட்ட பாஜ பெண் எம்எல்ஏ appeared first on Dinakaran.