
சென்னை,
மூத்த அரசியல்வாதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (93) காலமானார்.
சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், குமரி அனந்தன் உயிர் பிரிந்தது.
தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்ற இவர்தான், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார். விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்று குமரி அனந்தன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 2024 ஆம் ஆண்டில் இவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்தது.
1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழக சட்டசபை உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சாத்தான்குளம், ராதாபுரம், திருவொற்றியூர் தொகுதிகளில் இருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர் குமரி அனந்தன். இலக்கியச் செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் குமரி அனந்தன்.