புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது காங்கிரசை கடுமையாக தாக்கி பிரதமர் மோடி பேசியதாவது: அரியானாவில் மக்களை தூண்டுவதற்கு காங்கிரஸ் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் வெறுப்பூட்டும் சதித்திட்டங்களுக்கு இரையாகி விட மாட்டோம் என்பதை அரியானா மக்கள் நிரூபித்துள்ளனர்.
தலித்கள் மத்தியில் பொய்களைப் பரப்ப காங்கிரஸ் முயற்சித்தது. அவர்களின் இடஒதுக்கீட்டை பறித்து, தங்களின் வாக்கு வங்கியாக பயன்படும் சமூகத்திற்கு வழங்கும் அபாயகரமான நோக்கத்தை தலித் மக்கள் புரிந்து கொண்டனர். காங்கிரஸ் ஒரு பொறுப்பற்ற கட்சி. வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை. வளர்ச்சி, மரபு பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நாங்கள் இரண்டிலும் கவனம் செலுத்துகிறோம். காங்கிரஸ் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது.
இந்துக்களை பிளவுபடுத்தி ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக மோத வைக்க விரும்புகிறது. முஸ்லிம்களுக்கு எத்தனை பிரிவுகள் இருக்கின்றன என்பதை ஒரு காங்கிரஸ் தலைவர் கூட கூறியதில்லை. இந்துக்கள் என்றதும் சாதியை பேசுகிறார்கள். இந்துக்கள் பிளவுபட்டால் அதனால் பலன் கிடைக்கும் என்பது காங்கிரசுக்கு தெரியும். அரசியல் ஆதாயத்திற்காக இந்து மக்களிடம் தீயை மூட்ட காங்கிரஸ் விரும்புகிறது.
அரியானா தேர்தலில் பாஜவின் வெற்றி, நாட்டின் மனநிலையை காட்டுகிறது. இதே போல, சமுதாயத்தை பிளவுபடுத்தும் முயற்சிகளை மகாராஷ்டிரா மக்களும் நிராகரிப்பார்கள் என நம்புகிறேன். அரியானாவைப் போல மகாராஷ்டிராவிலும் பாஜ பெரிய வெற்றியை பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post காங்கிரஸ் பொறுப்பில்லாத கட்சி: பிரதமர் மோடி கடும் தாக்கு appeared first on Dinakaran.