வங்ககடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக தென்மாவட்டங்கள் கடந்த 3 தினங்கள் கனமழையை எதிர்கொண்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் பாதிப்பை எதிர்கொண்டன. ராமநாதபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் நல்ல மழையை எதிர்கொண்டன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் மற்றும் காட்டாற்று தண்ணீர் தூத்துக்குடியை சிதறடித்தது. வெள்ளத்தில் மிதந்த தூத்துக்குடியில் 6 ஆயிரம் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை துண்டிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் சென்றதால், வயல்வெளிகள் மூழ்கின. பல சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் கனமழை என்ற தகவலை கேள்விப்பட்டவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தந்த மாவட்டங்களுக்குரிய பொறுப்பு அமைச்சர்களையும், அதிகாரிகள் குழுவையும் களப்பணியாற்ற விரைந்து அனுப்பி வைத்தார்.
வெள்ளமீட்பு பணிகளுக்காக பேரிடர் மீட்பு படையும் களம் இறங்கிய நிலையில், அரசு நிர்வாகம் துரித கதியில் இயங்கியது. இத்தனைக்கும் வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவிக்கும் முன்பே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12ம் தேதி கனமழை கொட்டி தீர்த்திருந்தது. இச்சூழ்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர், வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
கலைஞர் கனவு திட்டமான வெள்ளநீர் கால்வாய் பணிகள் நிறைவுற்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில், வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணியில் உள்ள தரைப்பாலங்கள் மட்டுமே மூழ்கின. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் வகையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களை அங்கு தங்க வைத்தனர்.
அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் உடனடியாக வழங்கப்பட்டன. துண்டிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, போக்குவரத்தை அரசு நிர்வாகம் சீர்படுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகள், விளைநிலங்கள் உள்ளிட்டவைகளின் விபரங்கள் தொகுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக நிவாரண பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் வெள்ள சேதம் குறித்து தமிழக முதல்வரும் தொடர்ந்து இரு தினங்கள் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தவிட்டார்.
வெள்ளபாதிப்பில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதோடு, குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. மழைநீர் அதிகம் தேங்கிய இடங்களில் ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகமும், தன்னார்வலர்களும் கைகோர்த்து களம் இறங்கியதால், மழை வெள்ள சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டன.
தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெள்ளமெல்லாம் வடிந்த பிறகு, நிவாரண தொகை அறிவித்துவிட்டு களத்திற்கு வரும் ஆட்சியாளர்களை எண்ணி பார்க்க வேண்டிய தருணமிது. கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் எப்போதுமே தவிர்க்க முடியாதது. ஆனால் நம்மை காக்கும் கரங்கள் வலுவாக இருக்கும்போது, பொதுமக்களின் கவலைகள் எல்லாம் வெள்ளமாக வழிந்தோடிவிடும்.
The post காக்கும் கரங்கள் appeared first on Dinakaran.