கஷ்டத்தை சமாளிக்கும் வழி

3 months ago 20

பொதுவாகவே அஷ்டம தசை, விரய தசை, ஆறாமாதி தசை நடக்கும் பொழுது எந்த புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம் என்றுதான் எல்லா ஜோதிடரும் சொல்வார்கள். ஆனாலும் அந்தத் தசை நடக்கும் பொழுது ஒருவர் சும்மா இருக்க முடியாது. தொழில் செய்பவர் தொழிலுக்கான விரிவாக்கத்தை துணிந்து தான் செய்ய வேண்டும். அதேபோலத்தான் மற்ற விஷயங்களும்.

இதில் மிக முக்கியமானது என்ன என்று சொன்னால் அந்தக் காலத்தில் சற்று அதிக கவனம் எடுத்து செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொன்னால் போதும். அளந்து அளந்து ஒரு நிலைக்கு மேல் முதலீடு அதிகமாகிவிடாமல் செய்ய வேண்டும்.

அஷ்டம தசையில் நிச்சயம் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். ஆனால் அதே நேரத்தில் இந்தத் தசை ஒரு வியாபாரத்தின் அத்தனை ஏற்ற இறக்கங்களையும் நெளிவு சுழிவுகளையும் காண்பித்துக் கொடுத்துவிடும். அது மட்டுமல்ல அஷ்டம தசைக்கு பிறகு வரக்கூடிய தசைகள் என்ன என்று கவனிக்க வேண்டும். அது ஒரு சுப தசையாகவோ லாப தசையாகவோ அமைந்து விட்டால் அஷ்டம தசையின் கஷ்டங்கள் எல்லாவற்றின் பலனும் அந்த சுப தசையில் கிடைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

அதை விட்டு அஷ்டம தசை முழுக்க சும்மா இருந்துவிட்டு, சுப தசையில் நிதானமாக நாம் வியாபாரத்தை ஆரம்பித்தால் அதிலிருந்து ஏற்றம் பெறுவதற்கு நாள் ஆகும். சில வாய்ப்புகள் மாறிவிடும். அதனால்தான் அஷ்டம தசையில் தொழில் ஆரம்பிக்கலாமா என்று கேட்டவருக்கு நான் சொன்னேன்.

‘‘அஷ்டம தசையில் நீங்கள் கஷ்டப் படுவீர்கள். அந்த கஷ்டத்தை ஒரு கஷ்டமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். தொடர்ந்து செய்யுங்கள். ஆனால் கவனமாகச் செய்யுங்கள் நிதானமாக யோசித்துச் செய்யுங்கள். இந்த அஷ்டமாதி தசை முடிந்து லக்னாதிபதி தசை உங்களுக்கு ஆரம்பிக்க இருக்கிறது. அப்பொழுது இதற்கான அறுவடையை நீங்கள் நன்றாகச் செய்வீர்கள்’’ என்று சொல்லி அதைப் போலவே செய்தார்.

காரணம் தசா காலம் என்பது மிக நீண்ட காலம். உதாரணமாக சுக்கிர தசை இருபது வருடம். சனி தசை 19 வருடம். ராகு தசை 18 வருடம். புதன் தசை 17 வருடம். குரு தசை 16 வருடம். இப்படி நீண்ட கால தசைகள் தான் அதிகம் என்னும் பொழுது இந்த தசைகள் 6,8,12 ஆக அமைந்து விட்டால் நம்மை முடக்கி போட்டு விடும் என்று நாம் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது.

இந்தத் தசைகள் நமக்கு அனுபவத்தை சொல்லித் தருகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அனுபவத்தை அடுத்து வருகின்ற சுப தசையிலே பயன்படுத்தினால் நமக்கு வெற்றி மீது வெற்றி வரும். இந்த யுக்தியைத்தான் சொன்னேன். அவருக்கு தயக்கம் வந்தது. ஆம், அஷ்டம தசை தயக்கத்தையும், மயக்கத்தையும், குழப்பத்தையும் தரும். அது தசையின் இயல்பு.

அதை சுறுசுறுப்பினாலும், ஜாக்கிரதை உணர்வினாலும், நிதானத்தினாலும் முறியடிக்க வேண்டும். கஷ்டத்தை கொடுத்து அதை தாங்கும் சக்தியையும் இந்தத் தசைகள் தரும். நிறைவாக வெற்றியையும் தரும். ஒரு தசா காலம் முழுக்க ஒருவருக்கு துன்பமாக இருக்காது. அதில் சில நல்ல யோக புத்திகள் சுழற்சி முறையில் வரும். அந்த புத்திகளை வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இதற்கு கோசார கிரகங்களையும் கவனித்து காரியங்களைச் செய்ய வேண்டும். ஜோதிடக் கலையின் உன்னதமே இதுதானே. நமது நேரத்தின் தன்மையை உணர்ந்து செயல் படுவதுதானே.

அவரும் தொழிலை ஆரம்பித்து விட்டார். அதிக முதலீடு போடவில்லை. கடன் வாங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அப்படியே செய்தார். தொழில் தொடங்கியதிலிருந்து கஷ்டம் தான். பங்குதாரர்கள் மாற்றி மாற்றிப் பேசுவார்கள். அரசாங்க அனுமதி, இயந்திரங்கள் வாங்குவது, ஆர்டர் பிடிப்பது என கஷ்டம் மேல் கஷ்டம்.

நஷ்டம் வந்தாலும் விழிப்புணர்வோடு இருந்ததால் அந்த நஷ்டம் ஒரு கட்டுக்குள் இருந்தது ஆனால் அதே நேரம் இந்த இரண்டு வருட கஷ்டங்களும் தொல்லைகளும் அவருக்கு எதையும் எதிர் கொள்ளும் அனுபவத்தைத் தந்திருந்தது. தொழிலின் சாதக பாத கங்கள் அத்துபடி ஆயின.

புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாகி இருந்தார்கள். தொழிலை எப்படி நடத்தக் கூடாது என்பதை இந்த இரண்டு வருடத்தில் தெரிந்து கொண்டதால் எப்படி நடத்த வேண்டும் என்கிற மறைமுகமான பாடமும் எல்லோரும் அவருக்குச் சொல்லித் தந்திருந்தார்கள்.

இப்பொழுது லக்னாதிபதி திசை ஆரம்பித்து சுய புத்தி முடிந்தது. தொல்லை தந்த பாகஸ்தர்கள் விலகி விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டிய பணத்தை தவணைகளில் கொடுப்பதாக எழுதிக் கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டார். இப்பொழுது தொழில் இவருடைய கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது. நல்ல வாடிக்கையாளர்கள் ஓரளவு நிறைவான லாபம். இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் அந்த அஷ்டம திசை முடிந்த பிறகு லக்னாதிபதி திசையில், தொழில் ஆரம்பித்திருக்கலாம் என்று சொன்னால், வந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்து அதற்குப் பிறகு, இவர் எப்பொழுது முன்னேறுவது.?

ஒருவருக்கு எல்லா நேரமும் அதிர்ஷ்ட நேரமாக இருக்காது. ஆனால் நாம் நமது நேரத்தை கவனத்தோடு கையாண்டு அதிர்ஷ்ட நேரமாக மாற்றிக்கொள்ள முடியும். விழிப்புணர்வுடன் நிதானமாக நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு சில ஏற்பாடுகளுடன் தொழிலைச் செய்ய வேண்டும் என்கின்ற நேர்மறை அணுகுமுறை (positive approach) அவருக்குக் கை கொடுத்தது. இங்கேயும் ஜாதக பலன் தான் நடந்தது. ஆனால், அது எப்படி நமக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாம் என்கின்ற அமைப்போடு நடந்தது.

ஒரு இடத்திற்குச் சென்றாக வேண்டும். மிகக் கடுமையான மழை. நாம் என்ன செய்வோம்? மழை விடட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டோம். மழையைத் தாங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டுமோ, (ரெயின்கோட், குடை) முதலியவற்றை வைத்துக்கொண்டு நாம் சென்று விடுவோம்.

தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருக்கும் மழை ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்தில் நின்று விடும். பிறகு நாம் நம்முடைய மழை உடுப்புகளை கழற்றிவிட்டு நம்முடைய வேலையைச் செய்து விடலாம். மழை விட்டுத் தான் வர வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் அப்படியே அமர்ந்திருக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விடும்.

இப்படி அமர்ந்த நிலையில் மனரீதியாக வரும் சோம்பேறித்தனம் அப்படியே ஆளை முடக்கிப் போட்டு விடும். எனவே தான் ஜாதக பலனைச் சொல்லும் பொழுதும், அதை எடுத்துக் கொள்ளும் பொழுதும், இயன்ற அளவு நேர்மறை சிந்தனைகளோடு, கஷ்டம் வந்தாலும் இந்தக் கஷ்டத்தை எப்படிச் சமாளிக்கலாம் என்கிற யுத்தியோடு எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வளமாகும்.

The post கஷ்டத்தை சமாளிக்கும் வழி appeared first on Dinakaran.

Read Entire Article