
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகளும் மிகவும் சிறப்பு மிக்கது.
அதன்படி தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக நேற்று காலை சந்திரசேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதிக்கு தீர்த்தவாரிக்கு சென்றார். சாமி செல்லும் வழி முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வல்லாள மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்த போது சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வல்லாளமகாராஜாவுக்கு ஆண்டு தோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி நேற்று தீர்த்தவாரி மற்றும் திதி அளித்தல் நிகழ்ச்சி கவுதம நிதிக்கரையில் நடைபெற்றது. கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர். மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களும் சிலர் கவுதம நதிக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.