
சென்னை,
தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாராசிரியராக அறிமுகமான சினேகன். இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2021-ம் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியை சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சினேகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் இரு குழந்தைகளுக்கும் தங்க வளையல் அணிவித்து குழந்தைகளுக்கு "காதல், கவிதை" என பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து சினேகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு "காதல்" என்ற பெயரையும் "கவிதை " என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.