குன்னம், பிப்.12: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர், பெரியநாயகி அம்மன், மற்றும் பெரியண்ணா, பாப்பாத்தி அம்மன், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மி அம்மாள், பாவாடைராயன், வீரபத்திரர் கருப்பண்ணா, உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயில் மகாமண்டபம் கோயில் சுற்றுப்பிரகாரம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன. திருப்பணி வேலைகள் முடிந்ததை அடுத்து இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு அதில் 32 கலசங்களுடன் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்பணம், ரக்ஞாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், பூர்ணாகதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று மாலை 2ம்கால பூஜையும், இன்று காலை 7.30 மணியளவில் கோ பூஜை, நித்ய கோமம், யாத்ரா தானம் உட்பட பூஜைகள் நடந்தன. பின் யாகசாலை பூஜையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, வெடி மேளதாளங்களுடன் கோயிலை வலமாக வந்தனர். தொடர்ந்து விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டடு கும்பாபிஷேகம் நடைபெற்றுது. குழுமியிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது மஞ்சள் கலந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தி கோஷமிட்டனர். இரவு விசேஷ அலங்கராத்துடன் வெடி, மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். பெண்ணக்கோணம், ஆடுதுறை, ஒகளுர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post கழனிவாசலில் பெரிய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.