மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நாளான மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகிறது. மே 6ம் தேதி பட்டாபிஷேகம், 8ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
இதேபோல, பிரசித்தி பெற்ற மதுரை அழகர்கோவிலில் சித்திரை திருவிழா மே 8ம் தேதி தொடங்குகிறது. 9ம் தேதி சுந்தரராஜப்பெருமாள் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 10ம் தேதி மாலை 6 மணியளவில் அழகர் மதுரைக்கு புறப்படுகிறார். 11ம் தேதி காலை மதுரை மூன்றுமாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் `எதிர்சேவை’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 12ம் தேதி (திங்கள்கிழமை) காலை 6.05 மணிக்குள் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த விழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
The post கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம்; மதுரையில் மே 12ல் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.