கள்ளக்குறிச்சியில் ரூ. 153.86 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் - தமிழக அரசு உத்தரவு

2 months ago 15

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி நகராட்சி 09.08.2021-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்பு. 02.05.2023 முதல், தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 21 வார்டுகளை உள்ளடக்கி 15.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்நகராட்சியில், தற்போது தோராயமான மக்கள் தொகை 57,456 ஆக உள்ளது. இந்த நகராட்சிக்கு, நகரை ஒட்டியுள்ள கிராம பகுதியிலிருந்து பொதுமக்கள் குடிபெயர்ந்து வருவதால் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள மக்கள் தொகை மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து மேம்படுத்தி தர வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, இந்நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 2024-2025-ஆம் ஆண்டின் சட்டமன்ற மானிய கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது.

மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.153.86 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தவும். ரூ.20.93 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை 10 வருடங்களுக்கு இயக்கவும் மற்றும் பராமரிக்கவும், ரூ.6.84 கோடி செலவில், கழிவுநீர் சேகரமாகும் அமைப்புகளை 5 வருடங்களுக்கு பராமரிக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். மேற்காணும் திட்டத்தினால், மொத்தம் 14,079 குடியிருப்புகளுக்கு பாதாளசாக்கடை வீட்டிணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இத்திட்டத்தினை செயல்படுத்தும் போது கழிவுநீர் முறையாக சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து வெளியேற்றுவதால் இந்நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், மேம்பட்டு, பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article