சென்னை: கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கின் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி உள்ளது என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கள்ளச் சாராயம் தயாரிப்பவர், விற்பனையாளர் மற்றும் காவல் துறையினருக்கு மத்தியில் தொடர்பு இருப்பதாகவும், சிபிசிஐடி, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்து, இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி உள்ளது.