கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 3 ஆண்டுகளாக மூடிகிடக்கும் தபால்நிலையம்

1 hour ago 1

*பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை நிர்வாக வசதிக்காக புதிதாக கட்டப்பட்ட தபால்நிலைய கட்டிடம் மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடி கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாக பயன்பாட்டிற்கு இந்தியன் வங்கி மற்றும் தபால் நிலையத்துடன் கூடிய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் விரைவாக தபால் அனுப்புவதற்கு ஏதுவாக மருத்துவ கல்லூரி வளாகத்தில் தபால் நிலைய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கி கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த தபால் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலைய அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தபால் நிலையம் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் தபால் அனுப்புவதற்கு சுமார் 6 கி.மீடடர் தூரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. மேலும் மக்கள் நலனுக்காக அரசு நிதி ஒதுக்கி தபால் நிலையத்துக்கு தனி கட்டிடம் அமைக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து கிடக்கிறது.

எனவே இதனை விரைவாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே வளாகத்தில் திறக்கப்படாமல் இருந்த இந்தியன் வங்கி குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரனில் செய்தி வெளியானதையடுத்து கடந்த மாதம் இந்தியன் வங்கி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடதக்கது.

The post கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 3 ஆண்டுகளாக மூடிகிடக்கும் தபால்நிலையம் appeared first on Dinakaran.

Read Entire Article