கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற வாலிபர்: பள்ளத்தில் உடலை வீசிய கொடூரம்

1 week ago 5

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு வெள்ளூர் ஊராட்சி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரபாவதி (33). பாஸ்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு கோகுல் (வயது 9) என்ற மகனும், மித்ரா (வயது 6) என்கிற மகளும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபாவதி கடந்த 7ஆம் தேதி அவரது தாயார் தனலட்சுமியிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் தனலட்சுமி, பிரபாவதிக்கு போன் செய்தார் அப்பொழுது போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்துள்ளது. மேலும் பிரபாவதி குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

சந்தேகம் அடைந்த தனலட்சுமி பல்வேறு இடங்களில் தேடியும் பிரபாவதி கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணையை போலீசார் தொடங்கினர். இதில், கணவரை இழந்த பிரபாவதிக்கும், அதே ஊரைச் சேர்ந்த சம்பத் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் பிரபாவதியை அடித்துக் கொன்று உடலை என்.எல்.சி. சுரங்க பள்ளத்தில் வீசிய திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து சம்பத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில், "நான் பிரபாவதியுடன் நெருங்கி பழகி வந்தேன். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 7-ந் தேதி காலையில் நான் பிரபாவதியை எனது மோட்டார் சைக்கிளில் நெய்வேலி நகரத்துக்கு அழைத்து சென்றேன். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணியளவில் இருவரும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தோம்.

அப்போது செல்லும் வழியில் நான் மதுகுடிப்பதால் தான் என்னை விட்டு விலகிசெல்கிறாயா என கேட்டேன். இதில் எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இதனால் என்.எல்.சி. சுரங்கம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி பிரபாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நான் அங்கு கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து பிரபாவதி தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கிய பிரபாவதியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அருகில் இருந்த என்.எல்.சி. சுரங்கத்தின் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். இதில் அவர் இறந்து விட்டாள்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெய்வேலி டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் மற்றும் மந்தாரக்குப்பம் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த பிரபாவதி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர்.

Read Entire Article