
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா ஜாபரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு காந்தப்பா (வயது 28), கூலி தொழிலாளி. இவரது மனைவி சாரதா (24). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ராஜுவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் ராஜுவை அழைத்து இளம்பெண் உடனான கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தனர். மேலும் இந்த ஊரில் இருக்கக்கூடாது. மும்பைக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜு தனது மனைவி, குழந்தையுடன் மும்பைக்கு சென்றார். இருப்பினும் அங்கு சென்றதும் அவர், இளம்பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. மேலும் அவர் இளம்பெண்ணுடன் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் அண்ணன் தத்தாத்ரேயா, ராஜுவை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி இளம்பெண் மூலம் ராஜுவை சமாதானம் பேச வரும்படி அழைத்துள்ளார். இதை அறியாத ராஜு, கள்ளக்காதலியை சந்திக்கும் ஆர்வத்தில் மனைவி, குழந்தையுடன் நேற்று கிராமத்துக்கு வந்தார். அப்போது கோகினூர் மலை பகுதியில் அவரை வழிமறித்த தத்தாத்ரேயா, அவரது நண்பர் துக்கா ராம் மற்றும் இளம்பெண் ஆகியோர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ராஜுவை அழைத்து சென்றனர்.
அங்கு இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை அழிக்கும்படி கூறினர். அதற்கு ராஜு மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த தத்தாத்ரேயா மற்றும் துக்காராம் ஆகியோர் அரிவாளால் ராஜுவை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த அவரது மனைவி சாரதாவையும் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தம்பதி 3 வயது குழந்தையின் கண் முன்னே துடிதுடித்து இறந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து மண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து வந்து கொலையான ராஜு, சாரதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆதரவற்ற நிலையில் கிடந்த 3 வயது குழந்தையையும் மீட்டனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் மற்றும் அவரது அண்ணன் உள்பட 3 பேர் திட்டமிட்டு ராஜு, அவரது மனைவி சாரதாவை ஊருக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.