திருப்பூர்: கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் முழுவதும் இயற்கையான கள் விற்பனை தொடங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "இன்றைய தினம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய, கள் விடுதலை கருத்தரங்கத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோருடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக, கள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி, கள்ளுக்கான தடையை நீக்கத் தொடர்ந்து முயற்சித்து வரும் நல்லசாமி, இந்த கருத்தரங்கத்தை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது பெருமைக்குரியது.