களத்தில் நானும் நிதிஷ் ரெட்டியும் பேசிக்கொண்டது இதுதான் - வாஷிங்டன் சுந்தர்

3 weeks ago 3

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி பாலோ ஆன் ஆகிவிடும் என்ற இக்கட்டான சூழலில் இருந்தது. ஆனால் 8-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ரெட்டி ஜோடி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை தூக்கி நிறுத்தியது. சுந்தர் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியில் தாம் அசத்துவதற்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கிய பங்காற்றியதாக வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார். மேலும் நிதிஷ் ரெட்டியுடன் சேர்ந்து விளையாடியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சண்டையிட வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகும். அதற்கு தகுந்தாற்போல் விஷயங்கள் திரும்பியது இதயத்தை தொடுவதாக அமைந்தது. இது போன்ற சூழ்நிலையில் நிறைய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுவே எங்களுக்கு பெரிய பரிசு. இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இடமாகவும் இது இருப்பதால் நாங்கள் நல்ல நிலையில் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்.

என்ன நடந்தாலும் நாம் சண்டையிட வேண்டும் என்று நானும் நிதிஷ் ரெட்டியும் அடிக்கடி பேசிக்கொண்டோம். அவர் விளையாடியதை எதிர்ப்புறம் இருந்து பார்த்தது அற்புதமாக இருந்தது. எதுவாக இருந்தாலும் களத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்பதே எங்களுடைய அணியில் இருந்து கொடுக்கப்பட்ட மெசேஜ் ஆகும்.

கம்பீர் பாய் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். ஏனெனில் அவர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். என்னுடைய பேட்டிங் திறன் அணிக்கு மிகவும் முக்கியம் என்று அவர் தொடர்ந்து என்னிடம் கூறி வருகிறார். அதே போல பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவும் எனது ஆட்டத்தில் வேலை செய்துள்ளார். ஆஸ்திரேலியர்கள் போட்டியின் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை சமாளிக்க அபிஷேக் நாயர் எங்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்துள்ளது விஷயங்களை எளிதாக மாற்ற உதவியது" என்று கூறினார்.

Read Entire Article