கல்வி நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!

5 hours ago 5

சென்னை: கல்வி நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாததால், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான ரூ. 2,291 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல காரணங்களால் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நிபந்தனைக்கு தமிழ்நாடு உட்படாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். கல்வி நிதி தர உத்தரவிடக் கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ரூ.10000 கோடி தந்தாலும் மும்மொழி கொள்கை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கூறியிருந்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கூட “மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

The post கல்வி நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Read Entire Article