கல்வி அனைவருக்கும் பொதுவானது!

3 hours ago 2

கல்வி… சேவை… தனது வாழ்வில் இந்த இரண்டையும் லட்சியமாகக் கருதி செயல்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த கல்வியாளர், சமூக சேவகர், தொழில்முனைவோர் என பன்முகம் கொண்ட முனைவர் கிரேஸி. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ‘கிரேஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி’ என்ற அமைப்பின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி குறித்தும் அதற்கான உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள், பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருவதோடு, மாணவ-மாணவியர்கள், ஆதரவற்றோர் என பலரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்று ஆலோசனைகளும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். கல்வி குறித்த கருத்தரங்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என சுய முன்னேற்ற பேச்சாளராகவும் உள்ளார் கிரேஸி. இவரின் சேவையை பாராட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விருதும் அளித்துள்ளார்.

‘‘சிறு வயதில் கல்வி கிடைக்க நான் பட்ட சிரமங்கள்தான் வளர்ந்து நான் பெரியவளானதும், என்னைப் போல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை முதல் கடமையாக நினைத்தேன். காரணம், நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, குடும்பச் சூழல் காரணமாக பகுதி நேர வேலைக்கு போனேன். அதனால் என்னால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அது என்னுடைய கல்விக்கான பயணத்தை முழுமையாக பாதித்தது. பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்னால் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை.

அதன் பிறகு பல்வேறு இடங்களில் இருந்து எனக்கு கல்விக்கான நிதி உதவி கிடைத்த காரணத்தால்தான் என்னால் மீண்டும் படிப்பைத் தொடர முடிந்தது. உதவித்தொகை மூலமாகத்தான் என் மேற்படிப்பினை முடித்தேன். வாழ்வில் முன்னேற கல்வி மிகவும் அவசியம் என்று வெறி கொண்டு படித்தேன். முனைவர் பட்டம் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கல்விக்காக நான் பட்ட சிரமங்களை மற்றவர்கள் பெறக்கூடாது என்பதால் என் நண்பர் ராஜசேகருடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்’’ என்றவர், மாணவர்கள் கல்வி உதவித் தொகையினை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.

‘‘நான் படிக்கும் போது கல்வி உதவித் தொகையினை எவ்வாறு பெற வேண்டும் என்ற போதிய அறிவு கிடையாது. என் ஆசிரியர்களின் உதவியில்தான் உதவித்தொகை பெற்று படித்தேன். ஆனால் இன்று மாணவர்கள் எவ்வாறு உதவித் தொகையினை பெற வேண்டும் என்று அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லித் தருகிறேன். அதைப் பின்பற்றி பல மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும் எங்கள் அறக்கட்டளை மூலமாகவும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம். எங்கள் மூலம் படித்து முன்னேறிய மாணவர்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு உதவி வருகிறார்கள். இந்த உதவிச்சங்கிலி உடையாமல் தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

கல்வி உதவித் தொகை மட்டுமில்லாமல், +2விற்குப் பிறகு கல்லூரியில் என்ன பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்? மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழங்களில் உள்ள துறைகள் மற்றும் அதற்கான தகுதித் தேர்வுகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியினை எங்களின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறோம். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இலவச டியூசன் சென்டர்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன் முதல் படியாக சென்னையில் சோழிங்கநல்லூர் குமரன் நகரில் முதல் டியூஷன் சென்டரினை அமைத்திருக்கிறோம்.

சென்னை மற்றும் திருவள்ளூரில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழக ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இருக்கிறோம். இவை தவிர பண்டிகையின் போது நலிந்த குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள், பட்டாசு, தின்பண்டங்கள், உடைகள், சிறப்பு மதிய உணவு என வழங்கி வருகிறோம்.

கை வேலைப்பாடு செய்யும் பெண்களுக்கு அதற்கான இயந்திரம் வாங்க உதவி இருக்கிறோம். அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் மனநல மருத்துவமனையில் அவர்களுக்குத் தேவையான உடைகள், பெட்ஷீட்கள், பிரெட், பிஸ்கெட் போன்ற உணவுகளை வழங்கி வருகிறோம். இப்படி எங்களால் முடிந்த உதவிகளை நாங்க செய்து வருகிறோம். இதனை தொடர்ந்து வரும் ஆண்டில் கல்வி உதவித்தொகையினை அதிக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், ஆதரவற்ற பெண்கள், மனநலம் குன்றியோர், முதியோர், நரிக்குறவர் என அனைவரின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்ற கிரேஸி அவரின் சேவைக்காக சேவைச்சுடர், பீனிக்ஸ் விருது, சிறந்த சமூக சேவை விருது, சிறந்த கல்வியாளர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனுஜா ஜெயராமன்

The post கல்வி அனைவருக்கும் பொதுவானது! appeared first on Dinakaran.

Read Entire Article