பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆரோஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தயானந்த் சாகர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் அனாமிகா (வயது 19). இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவருடன் இருந்த மாணவிகள் அனைவரும் சாப்பிடுவதற்காக வெளியே சென்றிருந்தனர்.
அந்த நேரம் அறையின் கதவை உட்புறமாக தாழிட்ட அனாமிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவிகள் விடுதி அறைக்கு வந்தபோது உட்புறமாக பூட்டப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விடுதி வார்டனுக்கும் இது குறித்து தகவல் அளித்தனர். அவர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது உடனே அனாமிகா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து ஆரோஹள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அனாமிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அனாமிகாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மேலும் தற்கொலை கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரோஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.