
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கோமங்கலம் பூசாரிப்பட்டியை சேர்ந்த 21 வயது பெண் படித்து வந்தார். அவர், கடந்த 16.4.2019 அன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே அந்த மாணவி பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி வாய்க்கால் பகுதியில் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
பிரேத பரிசோதனையில் மாணவி கற்பழிக்கப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கு சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் மாணவியின் தூரத்து உறவினரான சதீஷ்குமார் (வயது 28) என்பவர், மாணவியை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு பெண் கேட்டுள்ளார்.
அவருக்கு நிரந்தர வேலை இல்லாததால் மாணவியின் பெற்றோர் மறுத்ததால் அவர் ஆத்திரத்தில் இருந்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே சதீஷ்குமாருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனாலும் அவர், கல்லூரி மாணவி மீது இருந்தமோகத்தை கைவிடவில்லை.
இதற்காக அவர் சம்பவத்தன்று மாணவி படித்த கல்லூரிக்கு காரில் சென்றார். அவரிடம் ஊரில் கொண்டு விடுவதாக கூறி உள்ளார். அதை நம்பிய மாணவி காரில் ஏறி உள்ளார். அதை பயன்படுத்திக் கொண்ட சதீஷ்குமார், மாணவியை பி.ஏ.பி வாய்க்கால் அருகே அழைத்து சென்று கற்பழித்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சதீஷ்குமார் மீது கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார், இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.