திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கேச்சேரி அருகே ஏற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாஹின் ஷா, யூடியூபர். இவர் தனது நண்பர்களுடன் காரில் திருச்சூரில் உள்ள கேரள வர்மா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது நண்பர்களுடன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.
பின்னர் அவர்களுடன் போட்டி போட்டு முகமது ஷாஹின் ஷா முந்தி செல்ல முயன்றார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் செல்ல முயன்றனர். ஆனால், முகமது ஷாஹின் ஷா காரில் விரட்டி சென்று கல்லூரி மாணவர்களை இடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சில மாணவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து அவர்கள் திருச்சூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூடியூபர் முகமது ஷாஹின் ஷாவை கைது செய்தனர்.