கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த ஆளுநர்: ஆசிரியர் அமைப்புகள் கடும் கண்டனம்

1 month ago 6

திருப்பரங்குன்றம்: கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கம்ப ராமாயணம் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பரிசுகள் வழங்கி பேசினார்.

ஆளுநர் தனது உரையின் முடிவில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என 3 முறை குரல் எழுப்பி, அங்கிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் திரும்ப முழக்கமிடும்படி செய்தார். ஆளுநர் பதவியில் இருப்பவர், அனைத்துத் தரப்பினரும் படிக்கும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த முழக்கத்தை எழுப்பி, அதை மாணவர்களையும் கூறச்செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிகழ்விற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நிகழ்ச்சி நடந்த தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பினர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விடுமுறை தினங்களான ஏப்ரல் 11, 12 ஆகிய இரு நாட்களிலும் கம்பன் விழாவுக்காக கல்லூரி நிர்வாகம் விடுமுறை விடாமல், சுமார் 570 மாணவர்கள் மற்றும் 45 ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி விழா அரங்கில் அமர வைத்தனர். விழா அரங்கிற்குள் சென்றவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை குடிநீர், ஸ்நாக்ஸ், தேநீர் எதுவும் இல்லாமலும், இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட செல்ல முடியாதவாறு மாணவர்கள், ஆசிரியர்கள் கொடுமைக்கு ஆளாகினர்.

50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்க கருத்தியலுக்கு எதிராகவும், வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலும் மக்களை பிளவுபடுத்தும் சனாதனத்தை வலியுறுத்தி ஆளுநர் பேசியுள்ளார். இறுதியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்தார். கல்லுரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது’’ என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா உள்ளிட்ட பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பான மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா, பொதுச்செயலாளர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்புமிக்க பதவியில் இருக்கக்கூடிய நபர்.

அவர், அனைத்து சமூக மக்களும் படிக்கும் ஒரு உயர்கல்வி நிறுவனத்தில், சர்ச்சைக்குரிய வகையில் ஒரு குறிப்பிட்ட மதம் குறித்த பேச்சுகளையும், மதம் சார்ந்த கோஷத்தையும் எழுப்பி அதையே அங்கிருந்த மாணவர்களையும் எழுப்பச் செய்தது மாணவர்களிடையே மதவாதத்தையும், வகுப்புவாதத்தையும் தூண்டும் விதமாக உள்ளது. இது கல்வி வளாகங்களை காவி மயமாக்கும் செயல். இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த சர்ச்சைக்குரிய செயல் சட்டவிரோதமானது. எனவே ஆளுநர் பதவி விலக வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ‘தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை விதைக்கிறார் கவர்னர்’
கும்பகோணத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உச்சநீதிமன்ற தீர்ப்பு கவர்னருக்கு எதிராக வந்துள்ளது. கவர்னர் ரவி கல்லூரிக்குள் கால் வைப்பதற்கு வெட்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கவர்னரின் வேந்தர் பதவி காலியாகி பல மாதம் ஆகிவிட்டது. தனியார் கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் என்று கவர்னர் கூறியது மதச்சார்பின்மைக்கு எதிரானது. இதன்மூலம் திட்டமிட்டு மதக் கலவரத்தை கவர்னரே தமிழ்நாட்டில் விதைக்கிறார் என்றார்.

* 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட இயக்க கருத்தியலுக்கு எதிராகவும், வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலும் மக்களை பிளவுபடுத்தும் சனாதனத்தை வலியுறுத்தி ஆளுநர் பேசியுள்ளார்.

The post கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த ஆளுநர்: ஆசிரியர் அமைப்புகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article