வலங்கைமான்: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினரும் தென்குவளவேலி அரசு பள்ளி ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் தயாரித்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வழிகாட்டி நூலினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து வழங்கினார்.
பின்னர் அரசு பள்ளி ஆசிரியர் சூரியகுமார் தெரிவித்ததாவது; அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு மாணவர்கள் தற்போது இருந்தே தயாராக வேண்டும். போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொற்காலமாக இருக்கப்போகிறது. 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளன.
பெரும்பான்மையான போட்டி தேர்வர்கள் எதிர்கொள்ளும் குரூப்-4 தேர்வு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வுக்கு இன்னும் பத்து மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. எனவே போட்டித் தேர்வர்கள் தற்போதிருந்தே தயாராக வேண்டும்.
இது குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இன்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் சந்தித்து நான் தயாரித்த குரூப் 4 வழிகாட்டி நாளை வழங்கினேன். மேலும் கல்வித்துறை சார்ந்த உயரதிகாரிகளிடமும், பேராசிரியர்களும் நூல்கள் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
The post கல்லூரி மாணவர்களிடம் டிஎன்பிஎஸ்சி விழிப்புணர்வு appeared first on Dinakaran.