கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

1 month ago 8

சென்னை: கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல. நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும்.

இது மிக அதிகம். செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article