
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் 'பி' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியுடன் ஆயத்தமாகியுள்ளனர். முன்னதாக மாலை 6 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகல தொடக்க விழா நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி நடிகை திஷா பதானி, ஸ்ரேயா ஹோஷல், கரன் ஆஜ்லா ஆகியோரின் ஆட்டம் , பாட்டம் நிகழ்ச்சிகளுடன் நடப்பு ஐ.பி.எல் தொடர் தொடங்கியது.